இதயத்தின் ரசவாதம்

நமது அன்பு செலுத்தும் சக்தியை அதிகரித்துக் கொள்ள

——————————————————————————-
உலக நோக்குடன் திறந்த மனத்துடன் எதற்கும் தயாராக இருக்கும் ஆன்மாக்களே மிக அழகான ஆன்மாக்கள்
– மாண்டேய்ன் (Montaigne)
======================================================

அந்த அதிகாலை வேளையில், உறைவிடம் இல்லாத இந்தியாவின் ஏழைகள் உறங்கிக் கொண்டிருந்த தெருக்களின் வழியே, கொல்கத்தா புகைவண்டி நிலையத்திற்கு அன்னை தெரசா அவர்களை வழியனுப்ப, அவருடன் வந்துகொண்டிருந்த மால்கம் முக்கரிட்ஜ் கூறுவது: “அன்னையை புகைவண்டியில் ஏற்றிவிட்டுத் திரும்பும்போது, இந்த உலகின் எல்லா அழகையும் மகிழ்ச்சியையும் நான் விட்டுவிட்டு வந்ததைப்போல் என் உள்ளத்தில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. எல்லாம் வல்ல அந்த இறைவனின் அளவில்லா அன்பின் மணம்தான் அன்னைமீது அப்பியிருந்ததாக உணர்ந்தேன்.”

எல்லாம் வல்ல அந்த இறைவனின் அன்பின் ஏதோ ஒன்றுதான் முக்கரிட்ஜ் மேலும் சிந்தியிருந்தது. அன்பு எனும் தீபம் உள்ளிருந்து பிரகாசிப்பிக்கும் அந்த மாயக்காரர்கள்தாம் எத்தனை மாயங்களைச் செய்துவிடுகின்றனர். அவர்கள் தொடுவதை எல்லாம் அவர்கள் மாற்றி விடுகின்றனர். இந்த முக்கரிட்ஜ் இறைநம்பிக்கையில் ஈடுபடாத முரட்டுத்தனம் மிக்க ஆங்கில பத்திரிக்கை எழுத்தாளர். 1960ஆம் வருடம் அன்னையை பேட்டியெடுக்க வந்த அவரை அன்னையுடனான அருகாமை முற்றிலும் மாற்றித்தான் விட்டது. “அன்னை தெரசா அவர்கள் எனக்கு செயலில் உள்ள அன்பு வடிவமாகவே இருக்கிறார். இருண்ட காலத்தில் அவர் ஒரு பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு மகத்தான விளக்கு,” என்கிறார்.

நீங்கள் யார் என்பது அவசியம் இல்லை, நீங்கள் தற்சமயம் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதும் பொருட்டல்ல. நீங்களும் அன்புவீச்சு உள்ள ஒரு விளக்காக மாறமுடியும். உங்களால் மற்றொருவரது இதயத்தை, பிரத்தியேகமான உங்களது அன்பு ஒன்றையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மற்ற பல இதயங்களையும் நீங்கள் அன்பினால் தொடமுடியும்.
ஆழ்ந்து சிந்தித்தால், நமது அன்பு செலுத்தும் சக்தியை அதிகரித்துக் கொள்வதை விட இன்றியமையாதது நமக்கு வேறு எதுவும் இல்லை. பகவான் கௌதம புத்தரின் சீடர் ஒருவர், குருவிடம் இவ்வாறு கேட்டார். “குருவே, நாங்கள் மேற்கொள்ளும் இப்பயிற்சிகளில் ஒருபகுதி அன்பையும் நேசத்தையும் வளர்ப்பது குறித்துத்தானே?”. இதற்கு புத்தர், “இல்லை மகனே, அது உண்மையல்ல. நீங்கள் பெறும் பயிற்சிகள் அனைத்துமே முழுக்க முழுக்க அன்பையும் நேசத்தையும் வளர்ப்பது குறித்துத்தான் அமைந்திருக்கின்றன” என்று பதிலிறுத்தார்.

அன்பைப்பற்றிய தனது அழகான விளக்கத்தில் இறைத்தூதர் புனித ஜான் அவர்கள் கூறியது: “இந்த செய்தியைத் தான் நீங்கள் ஆதியிலிருந்தே கேட்கிறீர்கள்: ஒருவர் மற்றவை நேசியுங்கள். நேசத்தைக் காட்டத் தெரியாதவன், இறைவனை அறியாதவன். ஏனெனில், அன்புதான் கடவுள்.” கடவுள் என்பவர் அன்புதான் என்றால், மற்றும் ஆதியாகமத்திலும், மற்றும் கீழை நாடுகளின் புனித நூல்களிலும் கூறியவாறு, இறைவன் தனது மகிமையாலும் உருவத்திலும் நம்மைப் படைத்தது உண்மைதான் என்றால், நாமும் அடிப்படையில் அன்பு வடிவத்தினர்தாம். அன்பு எனும் சக்தி விளைவித்திடும் மகத்தான அதிசயங்களை, படைத்த அவரும் நாமும் பார்த்து மகிழத்தான் உலகையே படைத்திருக்கிறார். உலகில் நம்மையும் படைத்து இருக்கிறார்.
அதனால்தான் நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை, ஏன் எல்லாமே கூட, அன்பைப் பெறுவது, அன்பைத் தருவது என்ற அடிப்படைத் தேவைகளைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. நாம் பாராட்டுக்காக ஏங்குவது, மரியாதை கிடைக்க வில்லையே என வருந்துவது, சுயமதிப்பு இல்லையே என நொந்துகொள்வது — எல்லாமே நாம் அன்பைத் தேடுவதையே குறிக்கின்றன. மிக சிக்கலாய், மர்மமாயுள்ள நம் வாழ்க்கைப் பாதையில், இதயத்திற்கு நோவுதரும் கடினமான திருப்பங்களை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும்போது, அந்த தெய்வீகமான உணர்ச்சியான அன்பு ஒன்றை நாம் மிகவும் தேடுகிறோம்.

நீண்ட நமது வாழ்க்கைப் பாதை நம்மை சிகரங்களுக்கும், மிக்க ஆழங்களுக்கும் கொண்டு செல்கின்றது. நம் வாழ்வில் அன்பைக் கொள்ளவோ, அன்பைத் தள்ளவோ நாம் இதுகாறும் செய்த முடிவுகளின் தன்மையே நாம் செல்லும் தடத்தின் நிலப்பரப்பின் தன்மையை உருவாக்குகின்றது. நம் வாழ்க்கையில் பாதையில் சாலைப்பிரிவுகள் தோன்றி, எப்பக்கம் நாம் செல்லுவது என்ற தயக்கம் ஏற்படும்போதெல்லாம், இத்தகைய ஒரு முடிவு எடுப்பது அவசியமாகிறது. அன்பு செலுத்துவதா, அன்பை மறுப்பதா, இதயத்தைத் திறந்து நம் நற்பண்புகளைப் பகிர்வதா அல்லது இதயத்தை இறுக்கமாக மூடிக்கொண்டு, நமக்காக யாரும் இல்லை என்ற, நாம் யாருக்காகவும் இல்லை என்ற மாய எண்ணங்களை வளர்த்துக்கொள்வதா என்று இந்த முடிவின் தன்மை விரியும்.

இந்தப் பாதை எப்போதும் எளிமையானதாக இல்லாததால், சில சமயங்களில் நாம் நிதானமாக மூச்சு விட்டுக் கொள்ள ஏதுவாக, மிகவும் பாதுகாப்பான கீழான வழியைத் தேர்ந்தெடுக்கிறோம். சில நேரங்களில் நம்மால் உயர்ந்த வழியை மேற்கொள்ள முடிவதில்லை. இது சகஜமானதுதான். இந்த வாழ்வில் நாம் எப்போதாவது மிகவும் நொந்து போயிருப்போம். அதனால், மீண்டும் இதயத்தைத் திறந்து அன்பைக் காட்டி, அது மீண்டும் நிராகரிக்கப் படுவதை நாம் விரும்பாமலிருக்கலாம். நாம் யாரோடிடமாவது ஆத்திரமாக இருக்கலாம். அல்லது நமக்குரிய அன்பான ஒரு உயிரைப் பறித்ததால் அந்த இறைவன்மேல் கூட கோபம் கொண்டிருக்கலாம். அல்லது, நம்மிடம் உள்ள குறைகளை உணர்ந்து நாம் பிறரின் அன்பு பெறத் தகுதியில்லாதவர் என எண்ணியிருக்கலாம்.

சில சமயங்களில், நாம் அறியாமலேயே பெரிய ஒரு அறைக்குள் நம்மைத் தள்ளிப் பூட்டிவிடுகிறது, நம் மனது. அடுக்கடுக்காய் பல சுற்றுச் சுவர்களுக்குள் உள்ளே உள்ள பாதுகாப்புக் கோட்டையில் நம்மைத் திணித்து, ஒளித்துக் கொண்டு, யாரும் நம் அருகில் வருவதையோ, நாம் பிறர் அருகில் செல்லுவதையோ நாம் தடுத்துவிடுகிறோம். ஆனால் இத்தகைய பாதுகாப்புக் கோட்டை, நம் அடிப்படைத் தேவையான அன்பைத் தருவது, அன்பைப் பெறுவது இவற்றிலிருந்தும் நம்மை மிக அன்னியமாக்கி விடுகின்றது.

அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம், நம்மை நம் மாயக்கோட்டையின் பாதுகாப்புத் தருகின்ற உறக்கத்திலிருந்து எழுப்ப, நம்மை விழிக்கவைத்து மீண்டும் அந்த அன்புப் பாதையில் அழைத்துச் செல்ல உலகம் யத்தனிக்கும்.

எனது குருவும் எனது கணவருமான மறைந்த திரு மார்க். எல். ப்ரோஃபெட் ஒருமுறை சொன்னார் இவ்வாறு: “இவ்வுலகில் நமக்கு ஏற்படும் எல்லா அனுபவங்களும் அன்பின் அர்த்தத்தை நாம் உணர்ந்து கொள்வதற்காகவே ஏற்படுகின்றன. எல்லா உறவுகளும், எல்லா நட்புகளும் நமக்கு அன்பைப் போதிப்பதாகத் தான் அமைகின்றன. ஆன்மா பாடம் கற்றுக் கொள்ளவே, அன்பின் பொருளை புரியவைத்துக் கொள்ளவே, எல்லாமே நிகழ்கின்றன. அன்பெனும் மகத்தான சக்தியே இந்த உலகை ஆட்டுவிக்கிறது, ஆட்டுவித்து ஒவ்வொரு மனிதனும் தன் இறைத் தன்மையை உணரத் தேவையான ஒரு நாதத்தையும் இசைவிக்கிறது.

நம் வாழ்வில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளும், நமக்கு ஏற்படும் எல்லா அனுபவங்களும், நமக்குக் கிடைக்கும் உறவுகளும், நட்புகளும், அன்பு எனும் மகத்தான சக்தியைப் பற்றி நாம் அறிந்துகொள்ளத்தான் என்ற சீரிய உண்மையை நாம் உணர்ந்தால், உடனே நமக்குள் ஏற்படும் மனமாற்றம் நம் வாழ்வின் நிகழ்ச்சிகளுக்குப் பின் உள்ள உண்மைகளை உணர்த்தி நமக்கு ஒரு தெளிவைத் தந்துவிடும். அன்புடன் பிணைந்த அந்த உயர்ந்த பாதை னம்மை அழைக்கும். வாழ்வெனும் தடத்தில் நாம் கடக்கும் ஆழங்களும், சிகரங்களும், நம் பயணத்தை ஒரு புனிதப் பயணமாக மாற்றிவிடும்.

“முடிவுகாணப் படாமல் இதயத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளிலும் பொறுமையாக இருங்கள். அத்தகைய கேள்விகளையே நேசியுங்கள். அத்தகைய பிரச்சினைகளையே வாழுங்கள்” என்று ரெய்னர் மரியா ரில்கே கூறியுள்ளார்.

அப்படி நம் வாழ்வை மாற்றும் வல்லமையுள்ள கேள்விகள் என்ன என்ன உள்ளன என்று யோசியுங்கள்.

இதோ சில கேள்விகள்:

கேள்வி 1 : எவ்விதத்தில் நான் என் இதயத்தைத் திறந்து, என் அன்பை தடையில்லாது பிறருக்கு அளிப்பேன் ?

கேள்வி 2 : நான் வாழ்வதின் நோக்கத்தை உணர்ந்து, அதை செயலாற்றி அடைந்து துயருற்றிருப்பவரின் வலியைத் தீர்ப்பது எவ்வாறு ?

கேள்வி 3 : கடந்த காலத்தின் காயங்களைப் போக்கி என் இதயத்துக்கு எவ்வாறு சுகமளித்து, அன்புகாட்டும் சக்தியை வலிமையாக்குவது ?

கேள்வி 4 : எவ்வாறு மற்றவருக்காக உழைத்துக் கொண்டு, என்னையும் வளர்த்துக் கொள்ள நேரத்தையும் பெறுவது ?

கேள்வி 5 : எப்படி என் இதயத்துக்குள் சென்று அங்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் அன்பின் தணலை, ஒளியை உணர்வது ?

கேள்வி 6 : எவ்வாறு என்னை அன்புவீச்சில் வல்லவனாக ஆக்கிக் கொள்வது.

———-இந்த ரசவாதம் இதயத்தைப் பற்றிய சிந்தனையில் தான் துவங்குகின்றது. ———-
============== #இதயத்தின்_இரசவாதம்* ==== எலிசபெத் க்ளைர் ப்ரோஃபெட் மற்றும் பாட்ரீசியா ஆர் இஸ்பாடாரோ எழுதியது. தமிழில் நான். – nytanaya
*Alchemy of the Heart by Elizabeth Claire Prophet and Patricia R Ispadaro

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.