காக்காய்க்_கூட்டம்

காக்காய்க்_கூட்டம்:
—————————————–
அண்மையில் “காக்கா பிடிக்கிறான்” என்ற கூற்று எவ்வாறு ஏற்பட்டது என்று ஒரு தமிழறிஞர் ஒரு முகநூல் பதிவில் விளக்கியிருந்தார். அக்காலத்தில் ஒரு பெரிய மனிதரிடம் ஒரு காரியம் ஆகவேண்டியிருந்தால், பெரியமனிதர் ஓய்வு எடுக்கும்போது சென்று அவரது ‘கால்’, ‘கை’ களை இதமாகப் பிடித்துவிடுவது வழக்கிலிருந்த ஒரு செயல். “கால், கை பிடிப்பவன்” என்பது மருவி ‘காக்காய் பிடிப்பவன்” என்று ஆயிற்று என்று விளக்கம் அளித்திருந்தார்.

அதைப் படித்தபின் என் சிந்தனை காக்கையைப் பற்றியே இருந்தது. அதன் விளைவே நான் இப்போது எழுதுவது:

 

பறவையான காக்காய்கள் நம்மால் மிகவும் பாதிப்படைந்திருக்கின்றன. ஆனாலும் “மனிதவர்க்கத்தில் காக்காய்பிடிக்கிறவர்கள் மட்டும் சுகமாக வாழ்கிறார்களே” என்று நிஜக் காக்காய்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

இன்று என் இல்லத்தரசி, சமைத்து ஆண்டவனுக்குப் படைத்த உணவை, காக்கைக்கு இடும்போது நான் மிக நேரம் அது சாப்பிடும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய எண்ணங்கள் இவை.

(அல்லது இது காக்கைதான் தன் மௌன மொழியில் தன் பார்வையால் எனக்கு உணர்த்தியதோ எனவும் பித்துப் பிடித்தவனைப் போல நினைக்கிறேன். இவ்வகைப் பித்து எனக்குச் சில சமயங்களில், பிராணிகளிடமும், பறவைகளிடமும், செடிகளிடமும் ஏற்படுவதுண்டு. அவை எனக்கு ஏதோ சொல்வதைப் போல உணருவேன். பல சமயங்களில் அவை சொன்னதாக நான் நினைத்த தகவல்களும் உண்மையாக ஆகிவிட்டிருக்கும். – மன்னித்து விடவும். தாங்கள் நினைப்பதால், நான் ஒன்றும் உடனே மன நல மருத்துவரைச் சென்று பார்த்து என்னைக் காட்ட முடியாது என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறேன். – அதற்காகவும் மன்னியுங்கள்.)

அக்காக்கை என்னை அகமுகமாக அதன் உலகத்திற்கு அழைத்துச் சென்றது:

காக்கையுலகில் உள்ள மனநலமருத்துவர்களின் 10ஆம் ஆண்டு ஆராய்ச்சிக் கூட்டத்தில், பல நாடுகளிலும் இருந்து காக்கைப் பிரதிநிதிகள் வந்திருந்தனர். உலகமுழுதும் இருந்தாலும் காக்கைகளின் மொழி காக்கப் பட்டு இன்னமும் ஒரே மொழியில்தான் அவர்கள் பேச்சும் எழுத்தும் இருக்கின்றன. எனக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. “காக்காயாவது எழுதுவதாவது, எப்படி இது சாத்தியம், நாம் இப்போது கொண்டிருப்பது பித்தமுச்சம் என்று உணர்ந்து, ஆனால் அச்சமுற்றேன். ஏன் எனில், நமக்குத் தெரியாத, நாம் மறந்துவிட்ட, பிறர் மனத்தைப் படிக்கும் சக்தி(1), மனிதனைத் தவிர மற்ற உயிர்களிடத்தில் இன்னும் உள்ளதே, இதைத் தெரிந்துகொண்டால், காக்கைகள் நம்மைக் கத்திக் கத்திக் கொத்திக் கொத்திக் கொன்றுவிடுமே என்று அடிவயிற்றில் இருந்து ஒரு எண்ணம் வந்ததை நெஞ்சளவுக்கு வராமல் மிக்க சிரமத்துடன் நிறுத்திவிட்டேன். இதயத்திற்கு அருகில்(2) அந்த எண்ணம் வந்துவிட்டால் காக்கைகள் கண்டுபிடித்து விடும், நாம் மீண்டும் மனிதருலகுக்குத் திரும்பமுடியாது என்று நான் அறிவேன். நல்ல வேளையாக எந்தக் காக்கையும் என் எண்ணத்தை அறியவில்லை. என்னை ஒன்றும் கேட்கவும் இல்லை.

3 நாள் நடந்த அக்கருத்தரங்கில், முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, வெளியில் வந்தபோது, ஒரு காக்கை அங்குவந்து, என் எண்ணம் அதற்குப் புரிந்துவிட்டதைப் போலப் பேச ஆரம்பித்தது.
======================

“தம்பி (!!!), நீ ஒரு சராசரி மனிதன் என்று தெரியும். காக்கைகளின் உலகில் எவ்வாறு நாங்கள் எழுதவும் படிக்கவும் தெரிந்து கொண்டோம் என்பதை நீயும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் இவ்வுலகிலும் பேச்சு எழுத்துக்கள் இல்லாதிருந்தன. அப்போது எங்களுக்கு நன்றாய்த் தெரிந்தவரான, நாங்கள் இன்றுகூடப் போனால் பிரியத்துடன் பேசுபவரான ஒரு தெய்வத்தை மட்டும் வணங்குவோம். அவர் யார் என்று உங்களுக்கும் தெரியும்.

உங்கள் உலகில், எல்லாப் பாவங்களையும் செய்துவிட்டு, சிறையில் இருந்து சிறிது நாள் பிணையில் வந்த கைதி, காவல் நிலையத்திற்குச் சென்று வாரந்தோரும் சென்று வணங்கிக் கையெழுத்திட்டுவருவது போல், பலரும் சனிக்கிழமை தோறும், கோயிலுக்குச் சென்று, நல்ல எண்ணெய் என்ற கலப்படமான பொருளினால் அவரின் சிலையைக் குளிப்பாட்டி வணங்குகிறீர்களே, அந்த சனிபகவான்தான்.

என் முன்னோர்கள் எழுதிய நூலில் இக்கதை இருக்கிறது.

ஒருமுறை ஆழிப்பேரலை போல ஒன்று ஏற்பட்டு, நீரில் நெருப்பு ஏற்பட்டது, காற்றால் அது பரவி உலகனைத்தையும் அழித்தது. எல்லா உயிரினங்களும் அழிந்தன. அப்போது வந்த தேவன் ஒருவர், பல உயிர்களைக் காத்துத் தன் படகில் ஏற்றிச் சென்று எல்லா உயிரினங்களிலும் உயர்ந்த குணமும் பராக்கிரமும் கொண்ட ஒவ்வொரு உயிரிலும் ஆயிரம் மாதிரிகளை மட்டும் காப்பாற்றி மிகப் பெரிய தன் படகில் ஏற்றிச் சென்று எங்களைக் காத்தார். உலகின் பல இடத்திலும் இருந்த, மற்றும் தமிழ் கொடிகட்டிப் பறந்த பரந்தபூமியான ஏழ்தெங்க நாடு முதலான 49 நாடுகளிலும் இருந்த அரிய சாத்திர நூல்களையெல்லாம், கலைப் படைப்புக்களையெல்லாம், சேகரித்துக் கொண்டுவந்து காத்திட, பெருங்கடவுளானவர் 10 தேவர்களை நியமித்திருந்ததாக அந்நூலில் எழுதப் பட்டிருக்கிறது.

ஒரு ஆயிரம் வருடம் கழித்துக் கணக்கு எடுத்துப் பார்க்கையில், காக்கையினம் மட்டும் அதிகமாக வளராமல் குறைவான காக்கைத் தொகையே இருப்பதுகண்டு, பெருங்கடவுளானவர், சனிபகவானை அழைத்து, காக்கையினத்தை அடிக்கடி சென்று பார்த்து அவை குறைகளைத் தீர்த்து, அந்த உயிரினத்தையும் பெருக்கிவருமாறு அறிவுறுத்தினார். அவருக்கு ஏதேனும் மேல் ஆலோசனை தேவைப் பட்டால், முற்றிலுமாக அழியும் நிலையில் இருந்த சிட்டுக்குருவி உலகைக் காத்த அனுபவமுள்ள வேறு தேவனிடத்தில்அவரை தொடர்புகொள்ளுமாறு கூறிவிட்டு, இதற்காக, சனிபகவான் அடிக்கடி பெருங்கடவுளான அவரைப் பார்க்க வருவதும், தொடர்பு கொள்ள முயற்சிப்பதும் கூடாது என்று உறுமிவிட்டு, சனிபகவானை எங்கள் உலகின் முக்கிய தேவனாக அறிவித்தார்.

சனிபகவான் மிகவும் பொறுப்புடன், எங்கள் தலைவர்களை அழைத்து எதனால் எங்களால் இனத்தைப் பெருக்க இயலவில்லை என்று ஆலோசித்தார். அப்போது எழுந்த கருத்துக்களும், சனிபகவானிடத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கொண்ட இதைப்படி” என்று ஒரு பெரிய புத்தகத்தை நீட்டினார். அதில் இருந்த விஷயங்கள்:

 1. “பறவையினத்தின் வாழ்வு பற்றி அறியாத மனிதர்களாலேயே அப்போதும் ஆபத்துகள் விளைந்திருந்தன. ஞானத்தைத் தொலைத்துவிட்டு, ஐம்புலன்களால் கற்றதையே அறிவாகக் கருதி, அதற்கு விஞ்ஞானம் என்று பெயரிட்டு (குறிப்பு: இக்கருத்து எனக்குச் சொந்தமானதல்ல, காக்கையுலகத்திற்குச் சொந்தமானது, எனவே சினம் கொள்ள வேண்டாம்) இயற்கையுடன் போரிட்டு, அதன் உன்னதமான நியதியைக் குலைத்து, காடுகளை அழித்து, பெருகிவரும் ஜனத்தொகையால் எங்கும் மரங்களே இல்லாமல் செய்து விட்டனர். எனவே எங்களின் இயற்கை வாசஸ்தலங்கள் மிகக் குறைந்துவிட்டன.
 1. அறிவியல் வளர்ச்சியால் இரவையும் மின்சாரத்தினால் ஒளியேற்றி, மின் கம்பங்களை நாட்டி, அதில் வரும் மின்சாரத்தினாலும், தகவல் தொடர்பு அலைகளாலும் பறப்பதையே பறவைகள் கைவிடுமாறு செய்துவருகிறார்கள். எந்த மிருகமாவது, பிராணியாவது பறவையாவது மனிதர்களை அவ்வாறு செய்ய முடியுமா ?
 1. தப்பித்தவறி மனிதரில்லா இடத்தில் நாங்கள் கட்டும் கூடுகளில், சோம்பேறிக் கூட்டமான மற்றொருபறவை வந்து வந்து முட்டையிட்டு, எங்கள் முட்டைகளைக் கீழே தள்ளி உடைப்பதுடன், அந்த முட்டையை உண்ண மரத்திலேறிவரும் ஆபத்தான விலங்குகளும் எங்கள் முட்டைகளையும் உடைத்து நாசம் செய்கின்றன.
 1. நாங்கள் எங்கள் உணவுக்காகச் செய்யும் வேலையான குப்பையையும், மக்கிப் போனதையும், தேடிக் கண்டுபிடித்து உண்பதே பெரிய காரியமாகிவிட்டது. குப்பைகளை இப்பொழுது வௌவால்களும், மனிதரின் நிலத்தைப்பற்றி அக்கறை இல்லாத செயல்பாடுகளால் மிக அதிகமாக இனப்பெருக்கம் அடைந்த எலிகளும் நாங்கள் தேடிச் செல்லும் உணவை அதிக அளவில் உண்ண ஆரம்பித்து எங்களுக்குக் கிடைப்பதைக் குறைத்துவிட்டன.
 1. காட்டில் இடம் குறைந்து போனதால், ஊர்களில் இருக்கலாம் என்று வந்தால், அங்கும் எங்களுக்கு நிம்மதியில்லை. மனிதர்கள் இயற்கையைக் கெடுப்பதும், மற்ற உயிரினங்களை தன் நன்மைக்காக அழிப்பதையும் கடவுள் கொடுத்த ஒரு வரமாக எண்ணி, அத்துமீறி செயல்கள் புரிந்துவருகிறார்கள்.
 1. சாலைகளில் உள்ள உயரமான கட்டிடங்களிலோ அல்லது கம்பங்களிலோ அல்லது கம்பிகளிலோ அமர்ந்தால், அங்கு சென்றுகொண்டிருக்கும் வாகனங்களில் இருந்து வரும் புகை, நரகத்தில் மனிதர்களை வாட்டுவதற்காக யமன் மற்றும் சித்ரகுப்தன் மேற்பார்வையில் கிளப்பப்படும் நச்சுப்புகையை ஒத்ததாய் இருக்கிறது.
 1. பூமியில் இருந்தும் கடலின் அடியில் இருந்தும் எடுக்கப்படும் எரிபொருள்எண்ணெய் ஆலைகளை மனிதர்கள் நடத்தும் விதம் மோசமாக உள்ளது; ஒரு குரங்கு எவ்வாறு அறிவின்றி எப்பொருளையும் உருக்குலைத்துவிடுமோ, உங்கள் உலகில் நீங்கள் உண்ணும் ஐஸ்கிரீம் என்னும் உணவுப் பொருள் ஒரு சிறு குழந்தையின் கையில் கொடுக்கப் பட்டால் அந்த பொருளை அது எவ்வாறு கையாள்கிறதோ அதைப் போலவே அவ்வாலைகள் நடத்தப் பெறுவதால், கடலில் பல உயிரினங்களை முற்றிலுமாக அழியச் செய்துவிட்டது. அவ்வாறு ஒரு விபத்து எங்களுக்கு நிகழ்ந்துவிடக் கூடாது. எனினும், இப்போது உயிருடன் இருப்பவர்கள் ஓரளவுக்குத் தங்களைக் காத்துக் கொள்ளமுடியுமே தவிர, கொசு, ஈ, எலி, பூச்சியினங்கள் போன்ற எப்படியும் வாழலாம் என்று நினைத்துவாழும் இனங்களைப் போல எங்களால் இனப் பெருக்கத்தில், மிக அதிக அளவில் நாங்கள் நாட்டம் கொள்ள முடியாது.
 1. இறந்துபோய் யமனுலகம் சென்ற மனிதர்களுக்கு, அவர்கள் மறைந்த தினத்தில் அவர்களின் உயிர்களை, அவர்களின் குடும்பத்தார் செய்துவந்த பூஜைக்கு வருவதற்காக, அந்த உயிர்களுக்கு பாஸ்போர்ட், விசா வழங்கும் யமனுலகின்அமைப்பானது அவ்வுலகில் இறைவன் பணியாளர்களாக நியமித்தவர்களின் பாவங்கள் தீர்ந்து அவர்கள் முக்தியடைந்து இறைவனுடன் கலந்துவிட்டதால், அப்பணிகளுக்கு பூமியில் வாழ்ந்த மறைந்த கொடுங்கோல் மன்னர்களையும், சர்வாதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் நியமித்துவிட்டதால், யமனுலகிலும் எதுவும் விதித்த விதிப்படி நடக்காமல் போய் அவ்வுலகில் தலைவரான தன் பணியைத் தானே சரியாக நிர்வகிக்க இயலாமல், யமதர்மராஜன் அவ்வலுவலகத்தை மூடிவிட்டார்.
 1. பெருங்கடவுளிடம் சென்று “என்ன, என் பணி இவ்வளவு கடினமாகி விட்டதே நான் என் செய்ய” என்று கதற, அவர்மேல் கருணைகொண்ட அன்புப் பெருந்தெய்வம், காக்கைகளை மூத்தோர்களின் Power of Attorney பெற்றுக் கொண்டு, அவர்களுக்குப் பதிலாக அவ்வாறு உரிமை பெற்ற காகங்கள் சென்று இறந்தவரின் வாரிசுகள் படைக்கும் உணவை நாங்கள் உண்ணலாம் என்றும் அவ்வாறு நாங்கள் உண்டால், அதன் பலன், இறந்தவருக்கும், அவர் வாரிசுக்கும் போய்ச் சேரும் என்ற ஒரு புது நியதியை செய்தார்.
 1. திருப்தியுடன் யமதர்மராஜன் திரும்பிவந்து, பூமியில் மிக மோசமான இழ்செயலாக இருந்தும், மனிதருலகில் மன்னிக்கத் தக்கதாய் படித்தவரும் கருதும் பிற மாதரைத் தவறாக எண்ணும் செயலை மட்டுமே செய்து அதனால் சிறுபல குற்றங்களைத் தவிர வேறு தப்பு ஒன்றும் செய்யாத நல்லவர்களான அறிஞர்களை யமனுலகுக்கு அழைத்து வந்து, தன்னுலக விதிமுறைகளை சிறிது தளர்த்தி, அவ்வாறு வந்தவர்களைக் கொண்டு, கடவுளின் இந்த யோசனையை அமுல்படுத்தத் தேவையான அமைப்புக்களையும், செயல்முறைகளைகளையும் ஏற்படுத்த ஒரு அறிஞர்கள் குழு ஏற்படுத்தி, மனித கால அளவில் மூன்று மாதத்துக்குள் அவ்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 1. ஆயினும் அந்த அறிஞர்கள் ஏற்கனவே இந்தியா போன்ற சில நாடுகளில் அரசுப் பணியில் இருந்தவர்களாதலால், அது மிகவும் கடினமான காரியம் என்றும், மூன்று மாதத்தில் தங்களால் அவ்வறிக்கையைத் தயார் செய்யமுடியாது என்றும், குறைந்த பட்சம் ஒரு தேவவருடமாவது ஆகும் என்றும், அதற்கு மிக்க பொருள் செலவாகும் என்றும் கூறவே, யமதர்மராஜர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். “துச்சர்களே ! நான் யாரென்று நினைத்தீர்கள். யாரங்கே இந்த அறுபது பேரையும் உடனே அழைத்து சென்று, மஹாயாக நகரிலுள்ள கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பரைகளுக்கு எடுத்துச் சென்று, இவர்களை அந்த வெப்பத்தில் தேவ நேரம் ஒரு மணி நேரம் இருக்கச் செய்து அழைத்து வா. அவர்களை கொப்பரைக்குள் போட்டுவிடாதே. அவர்தம் உடலில் கொதிக்கும் எண்ணெய் படாமல் ஜாக்கிரதையாக அழைத்துவா, அவர்களால் காரியம் ஆகவேண்டியிருக்கிறது” என்று ஆணையிட்டு விட்டார்.
 1. உடனே அந்த அதிகாரியும் இவர்களை மஹாயாக நகருக்குள் அழைத்துச் செல்லும்போதே இவர்களுக்கு முதலில் வியர்வை பெருகியது, பிறகு உடல் சூட்டினால் தோலின் நிறம் மாறிவிட்டது. முழுதும் கருகிவிடுவோமோ என்று அஞ்சினர்.
 1. பூமியில் கொடுங்கோல் மன்னர்களையும், சர்வாதிகாரிகளையும், அடிக்கடிஆட்சி மாறிவிடும் ஜனநாயக நாடுகளின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்றவர்களைக் கூட மிக நன்றாகச் சமாளித்து, அவர்களைக் கொஞ்ச நாளிலேயே இவர்கள் சொல்லுவதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக மாற்றும் கலைநுணுக்கத்தில் சிறந்த கலைஞர்களாக உயிர்வாழ்ந்திருப்பதால் இப்படி வளர்ந்த மூளையை உபயோகம் செய்து எப்படி இக்கொடுமைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்து, (இறந்தபிறகு கிடைக்கும் சில சக்திகளால்) அந்த யமனுலக அதிகாரியின் மனத்தை அறிய ஆரம்பித்தனர்.
 1. இவ்வழியில் அவர்களுக்குக் கிடைத்த தகவல்கள்: யமனுலகில் இவர்களை மஹாயாக நகருக்கு அழைத்து செல்லும் அதிகாரியின் மனத்திலும் ஒரு சோகம் குடிகொண்டிருந்தது. அவரின் மூத்த பிள்ளை பூமியிலிருந்து சென்ற இவர்கள் எல்லோரும் செய்திருந்த, பிறன்மனை நோக்கல் என்ற குற்றத்தைச் செய்து பிடிபட்டதால், யமனால் கைது செய்யப்பட்டு, அதன் பலனாக பூமியில் முற்றிலும் கஞ்சனாக வாழ்ந்த ஒருவனுக்கு வேலையாளாக அனுப்பப்பட்டான். மனித நேரத்தில் சுமார் ஐம்பதுவருடகாலம் சரியாக உண்ணாமல் இருந்து தானாகவே பட்டினியிலேயே உயிர்துறந்து மீண்டுவந்தவனை, அவன் மனம் இன்னும் மாறவில்லை என்பதால் கோபித்த யமதர்மராஜர், அவனும் அவன் தந்தையும் வருந்தி வேண்டியபின், அவனை அந்த மஹாயாக நகரின் Resident Governor ஆக யமதர்மராஜர் நியமித்திருந்தார் என்பதையும், அவன் தேவ நேரத்தில் இரண்டுவருடமாக அவ்வெம்மையில் புழுங்கித் தவிக்கிறான் எனவும் அறிந்தனர்.
 1. இவர்கள் அவ்வதிகாரியிடம் “எங்களை தாங்கள் மிகவும் வாட்டாமல் இருந்தால் தாங்கள் தங்களின் புதல்வனை இந்த துன்பமான நிலையில் இருந்து காப்பதற்கான ஒரு யோசனையை உங்களுக்கு இலவசமாகச் சொல்வோம்” என்று மயக்கினர்.
 1. பூமியில் அரசர்கள் காலத்தில் மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் போர்புரிந்த மன்னவர்கள், முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் இவற்றின்போது குற்றங்கள் இழைத்து கோடிக்கணக்கில் பிற உயிர்கள் மறைவதற்குக் காரணமான விஞ்ஞானிகள், படைகளை நடத்திப் போரிட்ட தளபதிகள், அவர்களை இயக்கிய தலைவர்கள் இப்பேர்ப்பட்டவர்களை அழைத்துவரும்போது, யமனுலகமே திண்டாடும்.
 1. அதிக அளவில் உயிர்கள் மடிந்து வருவதால் யமனுலகு வேலை மிகுதியால் அழற்சியுற்று, அதன் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்து, அவர்களைத் திருப்திப்படுத்த இயந்திரங்கள் யமனுலகில் அமைக்கப் பட்டன. அதற்கும் கூட பூமியில் இருந்து இறந்த விஞ்ஞானிகளும், பணத்தாசையில் பாலங்களும், கட்டிடங்களும், நீர்க்கால்வாய்களும் தரக்குறைவாகக் கட்டி, உலகப் போருக்கு இணயான எண்ணிக்கைகளில் மனித இறப்புக்குக் காரணமானவர்களை அழைத்துவருவார்கள்.
 1. அவர்களது இரும்பு நெஞ்சங்களை யமனுலக் கொப்பரைகளினாலோ தீயினாலோ வறுக்கவோ எரிக்கவோ முடியாது. அச்சமயங்களில் அவர்களுக்காக மஹாயாக நகரின் மூலையில் மிகப்பாதுகாப்பாக அமைக்கப்பட்ட (நம்முலகின் இரும்புஆலைகளைப் போன்ற கொதிகலன்களை உபயோகிக்கும்) மஹாக்னி எனப்படும் ஆலைகள் அமைக்கப் பட்டு, மிக்க வெப்பத்தை உண்டாக்கி மனித உலகில் மகத்தான சேவை புரிந்து இறந்த இந்த மஹா மனிதர்களின் இரும்பால் ஆன நெஞ்சை வறுக்கவும், எரிக்கவும் செய்வர்.
 1. அப்போது, அந்த வெம்மை யமனுலகோரையும் எரித்துவிடும் என்பதால் ஒரு பாதுகாப்பான மாற்றுடை யமனுலக உழியர்களுக்கு அளிக்கப்படும். அத்தகைய உடைகளை அவ்வதிகாரி இந்த அறுபது பேருக்கும் அளித்து அவர்களை வெம்மையிலிருந்துக் காத்து திரும்ப அழைத்துவந்தார்.
 1. இவ்வாறு திரும்பிவந்த அறுபதுபேரும் சிறிது சேதத்துடன் மட்டும் வந்ததால், இதை அறிந்த யமதர்மராஜன் மிகவும் சினமடைந்து, அவர்களை அழைத்துச் சென்ற அவ்வதிகாரியை அத்தகைய ஒரு பாதுகாப்பு உடை அணியாமல் சாதாரண உடையணிந்து, 10 தேவ வருடம் பணிசெய்ய அந்த சிறப்புவெப்ப மஹாக்னியின் Chief Foreman பதவியைப் பரிசளித்து அனுப்பிவிட்டார்.
 1. அறுபது பேரும் நடுங்கிப்போய், தங்களுக்கு மற்ற செலவுக்கெல்லாம் பணம் தரவேண்டாம் என்றும், தாங்கள் கேட்ட கால அவகாசம் மட்டும் கொடுங்கள் என்று வேண்ட, அவரும் ஒன்றும் யோசியாமல் எங்களைப் பற்றிக் கவலைப் படாமல் ஒருவருட தேவ காலம் அளித்துவிட்டார்.
 1. ஒருவருடமுடிவில், அந்த அமைப்பு உருவாகி, யமனுலக அரசியல் சாசனத்தில் சில மாற்றங்கள் செய்யப் பட்டு, 10000 பேர் வேலையில் சேர்க்கப்பட்டு, ஆறு நிலை கொண்ட ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தி, பெருங்கடவுளின் யோசனை அமுல்படுத்தப் பட்டது.
 1. தங்களுக்குத் தெரியும். நாங்கள் மனிதர்களுடன் பூமியில்தான் வாழ்கிறோம் என்று. ஒரு தேவ வருடம் எவ்வளவு மனித வருடம் என்று எங்களுக்குத் தெரியாது. அவ்வாறு ஒரு தேவவருடம் வீணாகிப் போனதால், எங்கள் இனத்தவர் இலட்சக்கணக்கில் இறந்துவிட்டனர்.
 1. எங்கள் உலகில் கல்வியை இன்னும் யாரும் வியாபார நோக்கில் பார்க்காததால், எங்கள் கல்வி முறையால் இறைவன் மனிதர்களுக்கு மட்டும் அளித்ததாகத் தங்களுலகம் பெருமைகொள்கிறதே, மூளை என்ற பாகமும் அது தரும் அறிவு என்ற விளைவும், அன்பால் செய்யப்பட்ட எங்கள் இதயத்தை சீர்கெடுக்கவில்லை. மேலும் எங்கள் உலகில், கல்விக்கும் மதிப்புண்டு, கலவிக்கும் மதிப்புண்டு. இவ்விரண்டையுமே புனிதமாகக் கருதிவருகிறோம். எங்களால் காதல் இல்லாமல் மணமுடிப்பதோ இனப்பெருக்கம் செய்வதோ இயலாது. எங்கள் உயிரினம் வாழ்வதற்கு இடமில்லாத உலகில் நாங்கள் ஜீவிப்பதே தினமும் போராட்டமாய் இருக்கிறதே. இதில் எங்கள் மனதில் எவ்வாறு காதல் எனும் உணர்வு தோன்றும்.
 1. எனவே உங்களிடம் அடைக்கலம் தேடி வந்துள்ள எங்களிடம் கேட்காதீர்கள். யமனைப்போல் காலதாமதம் செய்யாமல், வேறு எந்த தேவனிடமும் போய் யோசித்து பொன்னான நேரத்தை இந்த ஆபத்துசூழ்ந்த நேரத்தை விரயமாக்காது, பெருங்கடவுளிடம் சென்று யோசித்துவாருங்கள். நீங்கள் தேவ நேரம் இரண்டு மணி நேரத்தில் வராவிட்டால், நாங்கள் எல்லோரும் கடலில் விழுந்து எல்லோரும் மாய்ந்துபோவோம். தாங்கள் வரும்வரை இங்கேயே இருப்போம் என்று எல்லோரும் சொல்லிவிட்டனர்.
 1. குறித்த கெடுவான இரண்டுமணி தேவ நேரத்துக்கும் முன் வந்துவிட்ட சனிபகவான், தீவிரமாக காரியத்தில் இறங்கினார். ஒரு நாளுக்குள் ஒரு அவசரச் சட்டம் நிறைவேற்றி, பெருங்கடவுளின் ஒப்புதல் பெற்று ஒரு ஆணை பிறப்பித்தார். இது மட்டும் நிறைவேறினால் ஒருகல்லில் இரண்டுமாங்காய் என்று ஆனந்தப் பட்டார். காக்கைகளின் கோரிக்கையும் நிறைவேறும், தம்மை வணங்கும் பிரதம சிஷ்யனான யமதர்மராஜாவுக்கும் நன்மை செய்தது போலாகும் என்று மகிழ்ச்சியடைந்தார்.

அந்த ஆணை யென்ன என்று உடனே சொன்னால், கதைபடித்து வளர்ந்த உனக்கு சுவாரசியம் குன்றிவிடும். எனவே சற்றுப்பொறு. மேலும் சொல்கிறேன்.
இந்த ஆணை பிறப்பித்த காலத்தில் பூமியில் எங்கும் அரசாட்சிகளே இருந்தன. முக்கியமாக நீங்கள் வாழும் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் இருந்த மூன்று நான்கு நாடுகள் பிரிந்துபோய், ஏற்பட்ட சண்டைகளில், 400, 500 நாடுகளாயின. அப்போது பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் போரிட்டு வெற்றிபெற்ற மமதை கொண்ட மன்னர்களை துதிபாட ஒரு கூட்டமே உருவாயிற்று. அதுதான் புலவர்கள் கூட்டம். கலைமகள் இருக்குமிடத்திற்கு வர திருமகள் அஞ்சி, ஒருபோதும் புலவர்களிடம் வருவதில்லை. எனவே புலவர்கள் வறியவர்களாகவே இருந்தனர். உணவு கிடைத்தால் மட்டும் போதும் என்ற நிலை ஏற்பட்டு, உயிர்வாழும் உபாயமாக அரசரைத் துதித்துப் பாடுவதையே தொழிலாக மாற்றிக்கொண்டனர். அக்காலத்தில் 100000 பேருக்கும் மேல் எண்ணிக்கையில் இருந்த கவிஞர்களுள், எண்ணி ஐம்பதுக்கும் குறைவான புலவர்களே உலகம் போற்றும் காப்பியங்களையும், நூல்களையும் இயற்றினர். அவர்களைத் தவிர மிச்சமிருந்தவர்களே சனிபகவானின் புதிய ஆணைக்கு உள்ளானவர்கள்.
அப்புதிய ஆணை:
———————————————————————————————

 

______ சாசனத்தின் _______ ஷரத்தின்படி ___________ அரசரான பெருந்தெய்வத்தின் ______ தேதியிட்ட, ___________ எண்ணிட்ட உத்திரவுப்படி, நம் குலதெய்வமான சனிபகவான் ______ தேதியிட்ட ஆணை: இது உடனேயே அமலுக்கு வருகிறது. இதன்படி, இவ்வாணையின் கீழ் வருபவர்கள் பட்டியல்:

 1. மனிதருலகில் பொய்யையே பிழைப்பாகக் கொண்டு உயிர்பிழைக்கும் புலவர்கள்
 2. இக்காலத்திலும் எதிர்காலத்திலும் பொய் சொல்லியே தலைவரானவர்கள்
 3. பொய்யையே மூலதனமாகக் கொண்டு நடத்தப் படும் பத்திரிகைகளின் அதிபர்களும், எடிட்டர்களும்
 4. பள்ளிகளில் பாடத்திட்டத்தில் பொய்யைப்புகுத்துபவர்கள்
 5. உண்மையில் நடந்த வரலாற்றை மாற்றி எழுதுபவர்கள்
 6. பொய்யையே மூலதனமாகக் கொண்டு இயங்கிவரும் வேறு தொழில்களில் இருப்பவர்கள் (அவர்கள் யாரென்று என் காதில் மட்டும் சொல்லப்பட்டது)
 7. உண்மையையே பேசுவதாக உலகில் திரிந்துகொண்டு சொந்தவாழ்க்கையில் பொய்யாகவே வாழ்பவர்கள்

 

விதிவிலக்குகளான மனிதர்கள்:

 1. காதல், வீரம், நற்பண்புகள், இவற்றைப் பற்றி பொய் சேர்த்தோ அல்லது முற்றிலும் பொய்யாகவோ எழுதும் கவிஞர்கள், கட்டுரையாளர் இவர்களுக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
 2. மற்ற குற்றங்கள் புரிபவருக்கான விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.

விதிகள்:

 1. இவர்கள் பூமியில் மனிதர்களாக இருக்கும் காலம் முடியும்போது, நடுவுலகில் மனித நேரப்படி ஒரு ஆண்டுகாலம் தண்டனைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள்.
 2. பின்னர் அவர்கள் காக்கைகளாக பிறப்பெடுப்பர்.
 3. அவர்கள் காக்கைகளாக குறைந்த பட்சம் 100 பிறவிகள் எடுக்கவேண்டும்.
 4. காக்கையாகவும் இருந்து பொய்பேசினால் பொய்பேசிய பிறவியிலிருந்து மேலும் 100 பிறவிகள் காக்கையாகவே பிறப்பர்.
 5. மனிதராய் இறந்த பிறகோ மேலும் காக்கையாய்ப் பிறந்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட இத்தண்டனை தீருவதற்கு முன் யமனுலகுக்கோ, சுவர்க்கம், நரகம் இவற்றின் பக்கமோ வரக்கூடாது.
 6. அப்படி அத்துமீறிப்பிரவேசித்தால் மேலும் 200 காக்கைப்பிறவிகள் தண்டனையாக அமையும்.

இது புதிய விதிமுறையானதால், ஏற்கனவே இருக்கும் சில விதிமுறைகள் இவர்களுக்குச் செல்லாது:

 1. இறக்கும் உயிரெல்லாம் யமனுலகு வரவேண்டும் என்ற நியதி;
 2. இறந்தவர்களின்Power of Attorney பெறுவது
 3. இறந்தவர்களின் வாரிசுகள் படைப்பதில் இவர்கள் கலந்துகொண்டு உண்பது.

அப்படி உலகிலோ மேலுலகிலோ உள்ள நிர்வாகத் தவறுகளினால் யாரேனும் இந்த மூன்று விதிவிலக்குகளை மறந்து ஆணைகள் பிறப்பித்தாலோ அல்லது அப்படிப்பட்ட ஆணைகளை நிறைவேற்றினாலோ, அவர்கள் யமதர்மராஜ்யத்தின் துரோகிகள் என்று பிரகடனப் படுத்தப் பட்டு, அவர்களுக்கும் தக்க தண்டனை தரப்படும்.
———————————————————————————————

 

இப்படியாக எங்கள் குலதெய்வம் சனிபகவான் காக்கை யினத்தின் தொகையை அதிகரித்ததோடு, யமதர்மராஜாவின் வேலையையும் வெகுவாகக் குறைத்தார்.” என்று கூறிமுடித்து அந்த காக்கையறிஞர் சிறிது அமைதியானார். “இப்படி இந்தப் புதிய விதிப்படி காக்கையாய்ப் பிறந்தவர்களிடமிருந்துதான் நாங்கள் எழுதுவதைக் கற்றோம்” என்றும் கூறினார்.
================
இவர் மேலும் என்ன தகவல்கள் சொல்லப்போகிறாரோ என்று நான் காத்திருந்த வேளையில், “மணி பன்னிரண்டு ஆகிவிட்டதே ? ரிட்டயர் ஆனபின் ஏன் இப்படி மாறிவிட்டீர்கள். எங்கும் வெளியில் செல்வதில்லை. எப்போதும் கணினியையே கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள். என்னதான் ஆயிற்று உங்களுக்கு” என்று வந்த குரலோசை அருகிலே வந்துவிட்டது. “காக்கையைப் பார்த்துவிட்டுக் கதைஎழுத ஆரம்பித்துவிட்டீர்கள். என்னைப் பார்த்தோ நம் பெண்ணைப்பார்த்தோ எப்போதேனும் ஏதாவது ஒரு கவிதையாவது எதிலாவது எழுதியிருக்கின்றீரா? சிறுவயதில் கவிதையெல்லாம் எழுதியதாகச் சொன்னீர்களே, எந்தப் பெண்ணைப் பார்த்துக் கவிதைகள் எழுதினீர்கள் என்று ஏன் சொல்லவில்லை. இப்போதுதான் அறுபது வயது ஆகிவிட்டதே, இப்போதாவது சொல்லலாமே” என்று தொடர, நான் முறைக்க “ இந்த “FaceBookகைக் கண்டுபிடித்தவனுக்கும் சரி, சதா அதே வேலையாக இருப்பவர்களுக்கும் சரி, நிச்சயமாக சனிபகவானின் அடுத்த ஆர்டரில் காக்காய்ப் பிறவிதான்” என்று சாபமிடப்பட்டேன்.
——–
குறிப்புகள்:
1. ஆரம்பமுதல் இறுதிவரை இது முழுதும் கற்பனையே
2. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை
3. படிக்கும் யாரேனும் புண்பட்டால் மன்னிக்கவும்
4. மேலே (1), (2) என்ற குறியிட்டுள்ள இடங்களில் உள்ள பொருள்கள் பற்றி எப்போதாவது எழுதுவேன்.
5. முழுக்க முழுக்க சொந்தக் கற்பனையில் நான் இதை எழுதியவன் என்ற நிலையில் என் எழுத்துக்கு நானே உரிமை பூண்டவன்.

Advertisements

One thought on “காக்காய்க்_கூட்டம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.