‪‎உள்ளத்தை உருக்கிய வரலாற்றுக் கதை‬

உள்ளத்தை_உருக்கிய_வரலாற்றுக்_கதை‬

அண்மையில் படித்தது எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னமும் மீளமுடியாமல் செய்துவிட்டது. படித்ததை அப்படியே மாற்றாமல், சுருக்காமல் தருகிறேன், அதே தாக்கம் படிப்பவருக்கும் கிடைப்பதற்காக: (தொடர்ச்சியாக படிக்க இயலாதவர் விட்டு விட்டு சிறிது சிறிதாகப் படிக்க வேண்டுகிறேன்.)

‪#‎மனுநீதிச்சோழன்‬

‪#‎ஆன்_கன்றும்_கோன்_கன்றும்‬

அறம் பொருள் இன்பங்களை நல்ல முறையில் நடாத்திய மனுநீதிச் சோழனுக்கு உலகெல்லாம் போற்றும்படியான சிங்கக்குட்டி போன்ற மைந்தன் பிறந்தான். (திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த) மனுநீதிச் சோழ மன்னன், (திருவாரூரில் குடிகொண்டிருந்த சிவபெருமானான)‪#‎வீதிவிடங்கனை‬ வழிபட்டுப் பெற்றதால் அம்மைந்தனுக்கு வீதிவிடங்கன் என்றே பெயர் சூட்டினான்.

வீதிவிடங்கன் எல்லோரும் களிக்கும் வண்ணம் வளர்ந்து வந்தான். ஆசிரியர்கள் எல்லோரும் அரண்மனைக்கே வந்து குழந்தைக்குக் கல்வி பயிற்றுவித்தார்கள். பள்ளத்தில் வெள்ளம் வந்து சேர்வது போல எல்லாக் கலைகளும் அவனிடம் வந்து தங்கின. அவனுக்குப் பதினாறு வயதாகிவிட்டது. அது இளவரசு எய்துகிற பருவம். அந்தப் புதல்வனைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் மன்னன்.

அழகும், கல்வியும், சீலமும் குடிகொண்டிருந்த வீதிவிடங்கன், ஒருநாள் காலையில் தந்தையை வணங்கிவிட்டுக் கோயிலுக்குப் புறப்பட்டான். மந்திரி, சேனாதிபதிகள் ஆகியோரின் பிள்ளைகள் வீதிவிடங்கனுடன் தேரில் புறப்பட்டார்கள். ராஜவீதியில் தேர் சென்றபோது, வீதியில் எள்ளிட இடமின்றி மக்கள் திரண்டு மொய்த்தனர்.

மனுநீதிச்சோழன் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை இப்படிப் போகும்போது, தரும தேவதையே அம்மன்னனின் பண்பைச் சிறிதும் கருணையின்றிச் சோதிக்க விரும்பியது; தரும தேவதையே ஓர் இளங்கன்று வடிவத்துடன், தாய் மடியில் நிறையப் பால் குடித்துவிட்டு, ஒருவர் கண்ணுக்கும் புலனாகாதபடி அதிவிரைவில் துள்ளிக்குதித்து ஓடிவந்தது. ராஜவீதியில் பவனி செல்கின்ற அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, வேகமாய்ச் சென்று வீதிவிடங்கன் சென்ற தேர்க்காலில் விழுந்து குடல் சரிந்து, உடல் முறிந்து உயிர் துறந்தது. சப்தம் கேட்டு வீதிவிடங்கன் தேரைவிட்டுக் குதித்தான். அவனுடன் சென்றவர்கள் அனைவரும் தேர்க்காலில் கன்று சிக்கி மாண்டிருப்பதைக் கண்டார்கள். மனுநீதிச்சோழன் ஆட்சியில் யாரும் வளர்பிறையில் பல் குச்சி கூட ஒடிப்பதில்லை. செடிகொடிகளுக்கும் கூட யாரும் துன்பம் செய்ததில்லை. அந்நிலையில், பசுவின் கன்று தேர்க்காலில் சிக்கி இறந்ததை வீதிவிடங்கன் கண்டு, உள்ளமெல்லாம் குழைந்து உருகிக் கண்ணீர் விட்டான்; திருமேனி நடுங்கினான்.

இறந்த கன்றின் தாயாகிய அறிவுள்ள பசு அங்கு வந்தது. மானுடப் பெண்ணுக்குத் தன் குழந்தைமீது எத்துணை அன்பு உண்டோ, அதைவிட ஆயிரம் மடங்கு அன்பு பசுவுக்குத் தன் கன்றிடம் உண்டு. ஆதலால்தான் மாணிக்கவாசகர்,
‪#‎உற்றாரை_யான்வேண்டேன்_ஊர்வேண்டேன்_பேர்வேண்டேன்‬
‪#‎கற்றாரை_யான்வேண்டேன்_கற்பனவு_மினியமையும்‬
‪#‎குற்றாலத்_தமர்ந்துறையும்_கூத்தாவுன்_குரைகழற்கே‬
‪#‎கற்றாவின்_மனம்போலக்_கசிந்துருக_வேண்டுவனே‬
என்று பாடுகிறார்.

தாய்ப்பசு தன் கன்றின் இளமையுடல் நொறுங்கி இறந்திருப்பதைக் கண்டு, பொறுக்கமுடியாத துன்பம் கொண்டு இரத்தக் கண்ணீர் வடித்தது. “அம்மா, அம்மா” என்று கதறியழுது மூர்ச்சித்து விழுந்தது. அந்தச் சத்தம் எண்திசையிலும் கேட்டது. இந்தக் காட்சியைக் கண்ட வீதிவிடங்கனும் பசு தன் கன்றை நினைத்து எப்படி உள்ளம் உருகியதோ அப்படி உருகினான்.

“கெட்டேன் சிவபெருமானே ! பெரும்பாவத்தைச் செய்துவிட்டேன். அகிலாண்ட நாயகா ! தேவரீரைச் சேவிக்க எண்ணிய நான் நடந்தல்லவா வந்திருக்க வேண்டும் ? அரசபோகத்தில் மதிமயங்கித் தேர்ஏறி வந்தது பெருந்தவறு. அப்பாவச் செயலால் இப்பசுங்கன்று மாண்டதே ! குற்றமற்ற குலத்தில் பிறந்த நான் பசுவதையாகிய கொடும் பாவத்தைப் புரிந்துவிட்டேனே! என் தந்தையின் அரசாட்சிக்குப் பெரும்பழியைத் தேடிவைத்துவிட்டேன்! நமது சைவ வாழ்வு திருநீற்றில் அல்லவா இருக்கிறது ! எனில் அத்திருநீற்றைத் தருவது பசு அல்லவா! சைவத்தை வாழ்விக்கின்ற இந்தக் கன்று தேர்க்காலில் விழுந்து இறந்துவிட்டதே! இனி நான் இவ்வுலகில் வாழமாட்டேன். அடைக்கலம் தந்து, தானும் துலையேறிய சிபியின் மரபில் வந்த நான், குலத்திற்குக் கொடும்பழி தேடிவைத்தேனே! இப்பழி பாவத்தினின்று எப்படிக் கரையேறுவேன் ?” என்று எல்லாம் கதறித் துடிதுடித்தான்.

“இளவரசே! வருந்த வேண்டாம். இந்தக் கன்றை நீங்களாக வேண்டுமென்று கொல்லவில்லை. கன்றுக்கு ஆயூள் முடிந்தமையால் இத்தனைபேர் கண்களுக்கும் தோன்றாமல் வந்து, தானே தேர்க்காலில் வீழ்ந்து மாண்டது. அதற்குத் தாங்கள் என்ன செய்ய முடியும்? எல்லாம் சிவன் செயல் ! இதற்காகத் தாங்கள் உயிரை விடுவது நியாயமாகாது. வேதம் படித்த அந்தணர்களைக் கண்டு அபுத்தி பூர்வமாய்ப் பசு இறந்தால் என்ன பிராயச்சித்தம் செய்வதென்று கேட்டு, அதன்படி செய்துவிடலாம்” என்று அமைச்சரும் ஆர்வலரும் வீதிவிடங்கனிடம் கூறினார்கள். வீதிவிடங்கனை அழைத்துக்கொண்டு விதிநூல்வல்ல பெரியோரிடம் சென்றனர்.

“இளவரசே ! பன்னிரண்டு ஆண்டுகள் பசுத்தொழுவத்தின் தரையில் நீ படுத்திருக்க வேண்டும். பசு வெயிலில் இருந்தால் நீயும் வெயிலில் இருக்கவேண்டும். அவ்வாறு பிராயச்சித்தம் செய்தால் பாவம் நீங்கும்” என்று அவ்வந்தணர் கூறினார்.

—-
மனுநீதிச்சோழன் அரண்மனை வாயிலில், கட்டுக் காவல் இல்லாத இடத்தில் ஆராய்ச்சி மணி கட்டப் பட்டிருந்தது. குடிகளுக்குக் குறை ஏற்பட்டால் அரசனுக்கு அறிவிப்பதற்காக அம்மணி அங்கு கட்டி வைக்கப் பட்டிருந்தது. அந்த மணி கட்டிய நாள்தொட்டு இதுகாறும் யாரும் அந்த மணியை அடிக்கப்பிரமேயமே ஏற்பட்டதில்லை. இப்போது கன்றை இழந்து அழுகையுடனும் பரிதாபத்துடனும் ஓடிவந்த பசு, தனது கோட்டால் அம்மணியைக் ‘கணீர் கணீர்” என்று அடித்தது. “பழிப்பறை முழக்கோ? பாவத்தின் ஒலியோ? வேந்தன் வழித்திரு மைந்தன் ஆவிகொள வரும் இயமனின் கழுத்தில் உள்ள மணியின் ஆர்ப்போ?” என்று யாவரும் துணுக்குற்று அஞ்சி ஏங்க, அம்மணியின் ஓசை எங்கும் கேட்டது.

கருணையே ஒரு வடிவம் எடுத்த்து போன்ற மனுநீதிச் சோழன் அம்மணியின் ஒலியைக் கேட்டு நடுங்கி எழுந்தான். தனது வாழ்நாளிலேயே முதல்முறையாக ஆராய்ச்சி மணியோசை கேட்டுத் திகைத்தான் அவன்.

வெளியே ஓடிவந்தான். அமைச்சர்கள் அவனைச் சூழ்ந்து ஓடிவந்தனர். ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்த இடத்தில் பசு நின்றுகொண்டிருந்தது. கண்ணீர் சொரிந்த வண்ணம் கதறிப் பதறி நிற்கும் அப்பசு மணியை அடித்திருக்கும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. அப்போது காவலர்கள், மன்னரைத் தொழுது, “இப்பசு மணியை அடித்தது” என்று கூறினார்கள். அதனைக் கேட்ட மன்னன் அருகில் நின்ற அமைச்சர்களை இகழ்ந்து நோக்கினான். “இந்தப் பசுவுக்குத் தீங்கு செய்த பாதகன் யார்? ஏன் இது அழுகின்றது?” என்று வினவினான்.

மன்னருக்கு ஆறுதல் ஏற்பட வேண்டும் என்று எண்ணி உள்ளதை உள்ளவாறு சொன்னார்கள் அமைச்சர்கள்:

‪#‎வளவ_நின்_புதல்வன்_ஆங்கோர்_மணிநெடுந்_தேர்மேல்_ஏறி‬
‪#‎அளவில்தேர்த்_தானை_சூழ_அரசுலாந்_தெருவில்_போங்கால்‬
‪#‎இளையஆன்_கன்று_தேர்க்கால்_இடைபுகுந்_திறந்த_தாகத்‬
‪#‎தளர்வுறும்_இத்தாய்_வந்து_விளைத்ததித்_தன்மை‬”_என்றான்.
‘வளவ’ என்பது மாட்டு வளம், மனைவளம், நிலவளம் போன்றது. “மன்னவா! நம் ஊரில் ஆயிரமாயிரம் பசுக்கள் இருக்கின்றன. அவைகளில் ஒரேயொரு பசுவின் கன்றுதானே இப்பொழுது இறந்தது?” என்று ஒரு பொருள். ‘இளவரசர் தேர்மீது போனார்’ என்று மட்டும் சொன்னால், ‘ஏன் இப்படி அவசரப்பட்டுப் போனார்?’என்று மன்னர் கோபம் கொள்ளலாம். ‘வீதியை அடைத்துக்கொண்டு வானளாவிய தேர் சென்றது. கன்றுக்குக் கண் தெரியவில்லை. இளவரசர் மீது தவறு இல்லை. கன்றுக்குட்டியின் தவறுதான்’ என்ற பொருள் எல்லாம் பாட்டினுள்ளே இருக்கிறது. ‘ இளவரசர் தன்னத்தனியாகவா போனார்? ஆயிரமாயிரம் யானைகள், குதிரைகள் அவ்வளவும் அல்லவா அவருடன் சென்றன! ஆகவே, இளவரசர் மீதா தவறு? ராஜவீதியில் பசுமாட்டுக்கு என்ன வேலை?’ பாட்டில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் இப்படி அழுத்தமான பொருள் இருக்கின்றது. “கன்றுக்குட்டி மிகவும் சிறியது. அந்தக் கன்று இறந்ததால் தாய்ப்பசு வந்து அணி அடித்தது” என்று சப்பைக் கட்டுக் கட்டினார் மந்திரி.

அமைச்சரின் சொற்கள் வெந்த புண்ணில் விடந்தடவிய வேல் நுழைந்தாற்போல் அரசனுடைய செவியில் நுழைந்து, கன்றிழந்த பசு எவ்வளவு துன்புற்றதோ, அவ்வளவு துன்பத்தை அடைந்தான் மன்னன். “என் அரசாட்சியில் இப்போது இப்படி ஒரு தீங்கு நேர்ந்துவிட்ட்தே. இந்தப் பசுவின் கண்களில் அருவிபோல் நீர் வருகிறதே. இதைக் கண்டும் இன்னும் என் உயிர் பிரியவில்லையே. “மணியசைத்தால் மன்னன் மனத்துயரை நீக்குவான் என்று கருதித்தானே இப்பசு மணியடித்திருக்கின்றது! பசு உலக மாதாவன்றோ! சாதுவான உயிராகிய பசுவைக் கொல்வதற்காகவா நான் தவமிருந்து பிள்ளை பெற்றேன்? கோயிலுக்குப் போகிறவன் ஏன் தேர் ஏறிச் சென்றான்? சென்றவன் எச்சரிக்கையாகச் சென்றிருக்க வேண்டாமோ? இப்பசுவின் துயரை என்ன செய்து ஆற்றுவேன்?” என்று துடித்தான் மனுநீதிச்சோழன். திசைகளைத் திகைத்துப் பார்த்தான். உயிரற்ற உடல்போல் அசையாது நின்றான். பதைத்து உருகினான்:

‪#‎மன்னுயிர்_புரந்து_வையம்_பொதுக்கடிந்_தறத்தில்_நீடும்‬
‪#‎என்னெறி_நன்றால்_என்னும்_என்_செய்தால்_தீரும்_என்னும்‬;
‪#‎தன்னிளம்_கன்று_காணத்_தாய்_முகங்_கண்டு_சோரும்‬;
‪#‎அந்நிலை_அரசன்_உற்ற_துயரம்_ஓர்_அளவிற்_றன்றால்‬.

அரசனின் அல்லலைக் கண்டு கல்லும் மண்ணும் உருகின; அமைச்சரும் மற்றையோரும் அலறினார்கள்.

மன்னனை வணங்கி, “அரசே! எங்கள் சொற்களைக் கேட்டருள வேண்டும். கருணையே வடிவானவராதலால் தாங்கள் இவ்வாறு துன்புறுகின்றீர்கள். தங்கள் புதல்வர் மனதார அறிந்து இத்தவறு செய்யவில்லை. அவர் அருளே வடிவானவர்; ஓர் எறும்புக்கும் தீங்கு செய்யாதவர். செடிகொடிகள் காற்றில் அசையக் கண்டாலும் கண்ணீர் ததும்ப அவைகளை அணைத்து அலக்கணுறுவார்; அவர் மீது குற்றம் இல்லை; விதியினால் ஏவப்பெற்ற கன்று பல்லாயிரம் பேரையும் தாண்டிவந்து தானே தேரில் சிக்கி உயிரைவிட்டது. எல்லாம் அறிந்த தங்களுக்கு நாங்கள் அதிகம் கூறவேண்டுவதில்லை. அறியாமல் நேர்ந்த இக்கொலைக்குப் பரிகாரம் தேடுவதே முறை” என்று கூறினார்கள்.

“அமைச்சர்களே! நன்றாகக் கூறினீர்கள்.நடுநிலை தவறாதவர்க்கு இது நியாயமாகாது. தனக்கென்றால் ஒரு நியாயம்; பிறர்க்கென்றால் ஒரு நியாயமா? நீங்கள் பட்சபாதமாய்ப் பேசுகின்றீர்கள்.”
‪#‎மானிலங்கா_வலனாவான்_மன்னுயிர்காக்_குங்காலைத்‬
‪#‎தானதனுக்_கிடையூறு_தன்னால்தன்_பரிசனத்தால்‬
‪#‎ஊனமிகு_பகைத்திறத்தால்_கள்வரால்_உயிர்கள்தம்மால்‬
‪#‎ஆனபயம்_ஐந்துந்தீர்த்_தறங்காப்பான்_அல்லனோ‬?”

“தன்னாலும், தன் பரிசனத்தாலும், பகைவராலும், கள்வராலும், விலங்குகளாலும் தீங்கு நேரா வண்ணம், குடிகளைத் தன்னுயிர்போல் தருமநெறி தவறாமல் காப்பதன்றோ மன்னனது கடமை? என் மகன் செய்தான் என்பதற்காகப் பிராயச்சித்தம் செய்வது என்பதும், மற்றவன் செய்தால் மரணதண்டனை விதிப்பது என்பதும் எவ்வாறு நீதியாகும்? அவ்வாறு செய்தால் தருமம் சலியாதோ? உயிர்க்கு இறுதி நேர்ந்தாலும் உறுதியினின்று தவறாத நீங்களா இப்படிக் கூறுகின்றீர்கள்? என்னுடைய வினைப்பயன்தான் உங்களை இவ்வாறு சொல்லவைத்தது போலும்! ‘மனுச்சோழன்’ என்ற பெயரைத் தாங்கியுள்ள நான் அணுவளவும் மனுநெறியினின்றும் வழுவமாட்டேன். வழுவினால் இருபத்து எட்டு கோடி நரகமும் என்னை வாவென்று அழைக்கட்டும். பரிகாரமா சொல்கிறீர்கள்? பிராயச்சித்தமா சொல்கிறீர்கள்? எனக்கு ஒரு பரிகாரம் ஒரு பிராயச் சித்தம் தான் தெரிகிறது. கன்றை இழந்த இப்பசுவைப் போல நானும் மகனை இழந்து வருந்துவது ஒன்றே தக்க பிராயச்சித்தமும், நியாயமும் ஆகும். என் மகனுக்கு மரண தண்டனை விதிப்பதே எங்களிருவருக்கும் கழுவாய்” என்று, மனுநீதிச்சோழன் பாறையினும் உறுதியான உள்ளத்துடன் கூறினான்.

மந்திரிகள் திடுக்கிட்டனர். மன்ன்னைப் பணிந்து, “மாநிலங் காக்கும் மகிபரே! நாங்கள் கூறுவதைத் தயைசெய்து கேட்டருள வேண்டும். தாங்கள் கூறியது நியாயமாகாது. பசுவதை புரிந்தோர், இறந்த பசுவின் தோலைப் போர்த்துக் கொண்டு பசு மந்தையில் வசித்தும், கோநீரால் குளித்தும், பசுவைக் காத்தும், பசுதானம் புரிந்தும், பசுக்கள் மேயும்போது வெயிலில் இருந்தும், மழையில் பசு நனையும்போது தானும் நனைந்தும், பட்டினி கிடந்தும், உயிர் புரக்குமாறு சிறிது காய்கனிகள் அருந்தியும் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தால் பிராயச்சித்தம் கிடைக்கும் என்று அறநூல்கள் கூறுகின்றன. இவ்வாறு கழுவாய் தேடுவதை விடுத்துப் புதல்வனைக் கொல்வது முறையன்று” என்று வேண்டிக் கொண்டனர்.

“அமைச்சர்களே! அறநூலில் பசுவதைக்குக் கழுவாய் வகுக்கப் பட்டுள்ளதை நான் அறிவேன். அக்கழுவாய் உயிரில் விருப்பமுள்ளவனுக்கும், காமிய கருமங்களைச் செய்பவனுக்கும் விதிக்கப்பட்டுள்ள சாமானிய கருமமேயாகும். அப்பிராயச்சித்தம் சிவகதி அடைய விரும்பியவர்க்கும், பற்றற்றவர்க்கும் விதியாகாது. பசுவின் கன்று இறந்ததற்குக் காரணம் என் புதல்வனே. என் மகனுக்குப் பிராயச்சித்தம் விதித்து விட்டால் போதாது. அருமைக் கன்று இழந்து பசு அலறுவது போல், நான் என் புதல்வனை இழந்து அலறவேண்டும். இதுவே சிறந்த நீதியாகும். சாமான்ய நீதி, விசேட நீதி என்று நீதி இருவகைப்படும். விசேட நீதியை அனுசரிக்கும் என்னிடத்துச் சாமானிய நீதியை எடுத்துரைக்கலாமோ?” என்றான் மனுநீதிச்சோழன்.

“மன்னர் பெரும! தாங்கள் கூறுவதும் நியாயமே ஆயினும் சிந்திக்கத் தக்கது ஒன்று உளது. ஆறறிவு படைத்த மனிதனை மனிதன் கொன்றால்தான் மரண தண்டனை விதிக்கலாம் என்று அறநூல் வகுத்துள்ளது. இறந்த பசுங்கன்றோ ஐந்தறிவு படைத்தது…”என்று அமைச்சர்கள் இழுத்தார்கள்.

மன்னன் வெகுண்டான். “அமைச்சர்களே! திறமையுடன் பேசிவிட்டீர்கள். உங்கள் மதிநுட்பம் சாலவும் அழகியது. அறிவு என்பது உடம்பையும் பிறப்பையும் குறித்ததன்று.பகுத்தறிவு இல்லாத மனிதன் விலங்குதான். விலங்குக்கு அவ்வறிவு வாய்க்கப் பெற்றிருப்பின் அது மனிதன் தான்.‪#‎மனிதரில்_விலங்கு_உண்டு‬. ‪#‎மனிதரில்_மனிதர்_உண்டு‬.‪#‎மனிதரில்_தேவர்_உளர்‬. திருவானைக் காவில் சிவபெருமானுக்கு வெயிலும் சருகுகளும் படாவண்ணம் பந்தர் செய்த சிலந்தியையும், முப்போதும் பெருமானைப் பூசித்த யானையையும் விலங்கு என்று கூறலாமா? இந்தப் பசுவோ, தமக்கு எவரேனும் தீங்கு புரியும்போது, இம்மணியை அசைத்தால் நான் நேரில் வந்து நியாயம் வழங்குவேன் என்று நம்பி, வாயிலில் கட்டிய மணியை அசைத்து, என்னிடம் தன் குறையை அறிவித்து நியாயம் எதிர்பார்த்து நிற்கின்றது. அன்றியும் திருவாரூரில் பிறந்தார் எல்லோருக்கும் நான் அடியேன். திருவாரூரில் பிறந்த உயிர்களெல்லாம் புண்ணியம் செய்த உயிர்கள். ஆகவே, இறந்தது பசுங்கன்றுதானே என்று எண்ணிவிடாதீர்கள். இப்பசுவின் துயரை நீக்கும் திறமையில்லாத நான் அதன் துன்பத்தை அடைதலே தக்க பிராயச்சித்தமாகும்” என்று கூறினான். மந்திரிகள் மௌனமாயினர்.

மனுநீதிச்சோழன் காவலரையனுப்பி வீதிவிடங்கனை அழைத்துவரச் செய்தான். தந்தையின் அழைப்புக் கிடைத்தவுடனே, வீதிவிடங்கன் அஞ்சி நடுங்கியபடி வந்துசேர்ந்தான். மன்னன் மகனை நேராகப் பார்க்கவில்லை. நீதி விசாரணை நடத்தினான்.

“பசுவின் கன்றைக் கொன்றது நீதானா?”

“ஆம்.”

“ஏன் கவனக்குறைவாகத் தேர் ஓட்டிச் சென்றாய்?”

தேரை வீதிவிடங்கன் ஓட்டவில்லை; பாகன்தான் ஓட்டினான்; ஆயினும் குற்றத்தைத் தன்பால் ஏற்றிக் கொண்டு, “குற்றம் செய்துவிட்டேன்” என்று ஒப்புதல் அளித்தான்.

“மனுநீதிச்சோழன் மகனா நீ” கோபாவேசத்துடன் கேட்டான் அரசன்.

“தந்தையாருக்குத் தீராத பழி ஏற்படுத்திவிட்டேன்”. மனம் உருகி விடை பகர்ந்தான் வீதிவிடங்கன்.

மன்னன் தன் அமைச்சர்களுள் ஒருவராகிய கலாவல்லபரை அழைத்து, “பசுவின் கன்று மாண்ட இடத்தில் இவனைப் படுக்க வைத்து, இவன் ஏறிச்சென்ற தேரில் அமர்ந்து, இவனது மார்பின்மீது அதனைச் செலுத்துக” என்று ஆணையிட்டான். இம்மியும் மனம் குலையாது மன்னன் தன் மகனுக்கே மரண தண்டனை விதித்து விட்டான் !

கலாவல்லபரின் தலை சுழன்றது.மனம் கலங்கியது. உள்ளம் உருகியது. அவ்விடத்தினின்றும் நீங்கினார். “அரசரின் ஆணையை நிறைவேற்ற மறுப்பது ராஜத்துரோகம். இப்புதல்வனைக் கொல்வதோ பெரும்பாவம்; தெய்வமே! பார்த்துப் பார்த்து என்னிடமா மன்னர் இந்த ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்?” எனக் கலங்கினார். கடைசியில் அரசன் மகன் அடையவேண்டிய தண்டனையைத் தாமே ஏற்றுக் கொள்வதென முடிவு செய்தார். கன்று இறந்த இடத்தில் விழுந்தார் கலாவல்லபர்; ஐந்தெழுத்தைச் சொல்லிக் கொண்டு கண்களை மூடினார்; அவ்வளவில் அவரது ஆவி பிரிந்துவிட்டது.

தூதர்கள் மன்னரிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அருள் நிறைந்த அரசர் கோமான் அதனைக்கேட்டுக் கலங்கினான். துன்பத்துக்குமேல் துன்பமெய்தினான். “பழிக்குமேல் பழியும் பாவத்துக்குமேல்பாவமும் உண்டாகியதே! என் மகன் பசுவின் கன்றைக் கொன்றான்; நான் அன்பிற் சிறந்த என் அமைச்சரைக் கொன்றேன். தியாகேசப் பெருமானே! இப்படியும் என்னைச் சோதிக்கலாமா? ஐயனே ! நெறிதவறாத என் ஆட்சி முறிந்துவிட்டதே! என் செய்வேன்? குற்றம் எவர்மீதும் இல்லை. என்மீதுதான். அழுவதால் இனிப்பயன் ஒன்றும் இல்லை. மாண்ட பசுங்கன்றுக்காகத்தானே மகனைக் கொல்வதும், மாண்ட மந்திரிக்காக நான் உயிர் துறத்தலுமே செய்யக்கூடிய தக்க செயலாகும்” என்று முடிவுசெய்து கொண்டான்.

வீதிவிடங்கனை மகன் என்று நோக்காமல், பசுங்கன்று வீழ்ந்து இறந்த இடத்தில் சென்று படுத்திருக்குமாறு கட்டளையிட்டான். தந்தையின் நியாயத் தீர்ப்பைக் கேட்ட அம்மைந்தன் உள்ளம் உவந்தான். கன்று இறந்துகிடந்த இடத்துக்குச் சென்று மல்லாந்து படுத்தான். கண்களை மூடிக்கொண்டு சிவச் சிந்தையுடன் இருந்தான். நகரத்து மக்கள் ‘ஆ! ஆ!’ என்று அலறினார்கள். “ஆண்டவனே! இந்தக் குழந்தையைக் காத்தருள வேண்டும்” என்று கைகூப்பித் தொழுதனர். மன்னனின் தீர்ப்பை அறிந்த வீதிவிடங்கனின் தாய், மயங்கித் தரையில் வீழ்ந்து தளர்ந்து அழுதாள்.

மகனின் உடம்பின்மீது தேரைச் செலுத்துவதற்காக மனுநீதிச்சோழன் தேர் ஏறி வருகிறான்; வானும் மண்ணும் கலங்குகின்றன. தேவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.

‪#‎ஒருமைந்தன்_தன்குலத்துக்_குள்ளான்என்_பதும்உணரான்‬
‪#‎தருமம்தன்_வழிச்செல்கை_கடனென்று_தன்மைந்தன்‬
‪#‎மருமம்தன்_தேராழி_ஊறஊர்ந்தான்_மனுவேந்தன்‬ !
‪#‎அருமந்த_அரசாட்சி_அரிதோ_மற்_றெளிதோதான்‬?

மற்ற அரசர்கள் தருமம் போன வழியில் போனார்கள்.ஆனால், இம் மனுவேந்தன் போனவழியில் தருமம் செல்கிறது. கம்பர்பெருமான் இதனைப்பின்பற்றியே ‘விதிமுன் செல்லத் தருமம் பின்னிரங்கி யேக’ என்று பாடினார்.

“தியாகேசப் பெருமானே! என் உள் நின்று நீ உணர்த்தியவண்ணம் நீதியைச் செலுத்துகிறேன். குற்றவாளிகளை இங்கேயே தண்டிப்பதற்குக் காரணம் அவர்கள் மறுமையில் நரகம் எய்தக் கூடாது என்பதே யாகும்; அத்தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்யாதிருக்கும் பொருட்டுமாகும். நான் என் மகன்மீது கொண்ட கருணையினாலேயே அவனைத் தண்டிக்கிறேன். பெருமானே! என் மகனின் ஆவி, குற்றம் அகன்று நன்மை அடைய அருள் புரியவேண்டும்” என்று தியாகேசப் பெருமானை வணங்கித் தியானித்து, மல்லாந்து படுத்திருந்த மகனின் மார்பில் தேரைச் செலுத்தினான் மன்னன். அழகிய அரசிளங்குமரனின் திருமேனி தேர்க்காலில் அகப்பட்டு, அரைபட்டு, அவனது ஆவி பிரிந்தது. நீதியைச் செலுத்திவிட்டான் மனுநீதிச்சோழன்!

மண்ணவர் எல்லோரும் கண்ணீர் மழை சொரிந்தார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவர்க்கும் மூவர்க்கும் எட்டாத எம்பெருமான், உமையம்மையாரோடு விடைமீது தோன்றினார்.

‪#‎தண்ணளிவெண்_குடைவேந்தன்_செயல்கண்டு_தரியாது‬
‪#‎மண்ணவர்கண்_மழைபொழிந்தார்_வானவர்பூ_மழைசொரிந்தார்‬
‪#‎அண்ணலவன்_கண்ணெதிரே_அணிவீதி_மழவிடைமேல்‬
#விண்ணவர்கள்_தொழநின்றான்_வீதிவிடங்_கப்பெருமான்.

அகக்கண்ணாற் கண்ட ஆண்டவனைப் புறக்கண்ணாலும் கண்டான் அரசன்.செஞ்சடையில் விளங்கும் பிஞ்சு மதியையும்,பவளம்போல் மேனியில் பால்வெண்ணீற்றையும், மரகதக்கொடி போன்ற மங்கை நல்லாளையும் கண் குளிரக் கண்டு, கைகூப்பி வணங்கினான்.

#பூதநா_யகனே_போற்றி!_புராரியே_போற்றி!_ஞான
#போதநா_யகனே_போற்றி!_புண்ணியப்_பொருப்பே_போற்றி!
#நாதநா_யகனேபோற்றி!_நங்கைநா_யகனேபோற்றி!
#வேதநா_யகனேபோற்றி!_விமலனே_போற்றிபோற்றி!”

என்று வாயாரத் துதித்தான் மன்னன். கருணை மழை பொழிந்தார் ஈசன். உடனே வீதிவிடங்கன் உயிர்பெற்று எழுந்தான் என்றுதானே எதிர்பார்க்கிறீர்கள்? அதுதானில்லை. வீதிவிடங்கன் முதலில் உயிர்பெற்றெழுந்தால், மீண்டும் அவனைத் தேர்க்காலில் இட்டுச் சோழமன்னன் கொன்றுவிடுவான் என்று பரமன் நினைத்தார். எனவே, முதலில் கன்றை உயிர்பெற்று எழச் செய்தாராம் எம்பெருமான்! ஆம். கன்று உயிர்பெற்றபின், சிறந்த கோன் கன்றான வீதிவிடங்கனும் மதிமந்திரியும் உயிர்பெற்றெழுந்தனர். சிவபெருமான் மனுநீதிச் சோழனை நோக்கி, “நெடுங்காலம் இந் நில உலகை நீ நீதி வழுவாது அரசு புரிந்து சிவபதம் அடைவாய்” என்று அருளிவிட்டு மறைந்தார்.

உயிர்பெற்று எழுந்த வீதிவிடங்கன் தந்தையார் தாள்மேல் வீழ்ந்தான். மைந்தனை எடுத்து மார்போடு அணைத்து மனம் மகிழ்ந்தான். “என் கண்ணே! காணக் கூடாத கண்ணுதற் கடவுளை உன்னால் கண்டேன். நீயே என் குலவிளக்கு. உன்னை ஒப்பார் விண்ணிலும் இல்லை. மண்ணிலும் இல்லை” என்று புகழுரைகூறித் தழுவிக்கொண்டான். உயிர்பெற்று எழுந்த மதிமந்திரியாரும் மன்னனைத் தொழுதார். மன்னன் அவரைத் தழுவி அவரது அன்பைப் பாராட்டினான். தன் கன்றைக் கண்ட பசு, மடி சுரந்து மோந்து மகிழ்ந்து நின்றது. கன்று பால் உண்டு பரிந்து நின்றது.

#அடிபணிந்த_திருமகனை_ஆகமுற_எடுத்தணைத்து
#நெடிதுமகிழ்ந்_தருந்துயரம்_நீங்கினான்_நிலவேந்தன்;
#மடிசுரந்து_பொழிதீம்பால்_வருங்கன்று_மகிழ்ந்துண்டு
#படிநனைய_வரும்பசுவும்_பருவரல்நீங்_கியதன்றே.

சிவபெருமான் திருவருளால் மாண்ட அனைவரும் உயிர்பெற்று எழுந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் இன்பக்கடலில் மூழ்கினார்கள். அரசமகாதேவி அளவற்ற ஆனந்தம் அடைந்து மகனை அணைத்து மகிழ்ந்தாள். எல்லோருமாகத் திருக்கோயில் சென்று பெருங்கருணைபுரிந்த பிறைமுடிப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, வாயார வாழ்த்தி, தலையாரக் கும்பிட்டு, நெஞ்சார நினைத்து, முறைப்படி வழிபாடு செய்தனர். பின்னர், மகனுடன் அரியணை மீது இருந்து தண்ணளியுடன் மண்ணகமெல்லாம் மாட்சிமையுற ஆட்சி புரிந்தான் மனுநீதிச் சோழன்.

———- நன்றி: #திருமுருக_கிருபானந்தவாரியார், #சிவனருட்செல்வர்” , #வானதி_பதிப்பகம், 2011 பக்கம் 54 முதல் 69 வரை—————————-

இதனை மடிக் கணினியில் தட்டச்சு செய்யும்போது பலமுறையும், செய்துமுடித்தவுடனும், என் கணினிக்கு ஏதோவொரு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பலமுறை கைக்குட்டையால் கணினியில் மீண்டும் மீண்டும் துளிர்த்திருந்த தண்ணீரைத் துடைக்க வேண்டியிருந்தது. ஈரமாய் இருக்கும் எழுத்துக்கள் காய்வதற்கு முன்னரே நான் முகநூலில் இதைப் பதிவுசெய்கிறேன். இதனால், இதைப் படிக்க நேரும் யார் கணினியிலாவது இந்த நோய் பரவினால், என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம். ஐந்தெழுத்து மந்திரம் ஒன்றே கணினிக்கு அருமருந்து.-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.